தேர்வு நேரத்தில் மாணவர்களை விட அதிகம் டென்ஷனாவது பெற்றோர்தான். காரணம் மார்க். இதனாலேயே விளையாட்டு என்பது பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விலகி போய் விட்டது. பள்ளிகளில் கிரேடு முறை அறிவித்ததன் மூலம் மீண்டும் குழந்தைகள் விளையாட்டை சந்தோஷமாக அனுபவிக்க போகிறார்கள்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மார்க் கிடையாது.
கிரேடுதான் கடைப்பிடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை அடுத்து தமிழக பள்ளிகளில் அதிரடியாக இந்த கிரேடு சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரேடு முறையில் மொத்தம் 60 மார்க்தான் தேர்வுக்கு. மீதி 40 மார்க் மாணவர்களின் பல்வேறு திறமைகளை மதிப்பிட்டு வழங்குவது. அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8 வகுப்புகளுக்கும் அடுத்ததாக 9, 10ம் வகுப்புகளுக்கும் புதிய முறை கொண்டு வரப்படுகிறது. 10, 12ம் வகுப்புகளுக்கு அரசு தேர்வு முறையும் ஒழியப் போகிறது. இதனால் இந்த இரண்டு வகுப்போடு படிப்புக்கு முழுக்குப்போடும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையப் போகிறது.
இதுவரை படிப்பு மட்டும் இருந்தால் போதும். இனி அப்படி கிடையாது. உடற்கல்வி, நாட்டுப்புறக் கலை, யோகா, தோட்டக்கலை, ஜிம்னாஸ்டிக்ஸ், வேலை அனுபவம், போட்டோகிராபி, கராத்தே, நாடகம், நடனம், பாட்டு, ஸ்கவுட், என்எஸ்எஸ், என்சிசி, கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள், கபடி, புட்பால், பேஸ்கட் பால், கிரிக்கெட், கிராப்ட் திறன் என பல விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்.
காரணம் அதற்கும் மார்க் உண்டு. மார்க் உண்டு என்றால் மலை மீது கூட ஏறத் தயங்க மாட்டார்கள் என்பதால் கண்டிப்பாக அத்தனை புது விஷயங்களும் குழந்தைகளுக்கு கிடைக்கப் போகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மாணவர்களுக்கு, இனி பள்ளி படிப்பு வித்தியாசமான அனுபவமாக மாறப்போகிறது.
கடந்த 2009ம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் கிரேடு சிஸ்டம் கொண்டு வரப்பட்டது. அதுமுதல் படிக்கும் நேரம் குறைந்து மற்ற திறன்களை வளர்த்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சமச்சீர் கல்வியும் அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள கிரேடு முறையும் கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
Post a Comment